உதவி செய்ய விரும்பு…

0

உதவி செய்ய விரும்பு…
நாம மட்டும் நல்லா இருந்தா போதாதா? ஏன் வேற ஒருவருக்கு உதவி செய்யணும்? “நாமளும் நம்ம குடும்பமும் நல்லா இருந்தா மட்டும் போதும். உதவுவதற்கெல்லாம் நிறைய பேர் இருக்காங்க. நம்ம பொழப்பை பார்த்தா போதும்” இப்படித்தான் பல‍பேர் நினைக்கிறாங்க… ஆனா உலகம் யாரையும் தனிச்சி விடறதில்ல. ஒவ்வொன்றும் வேறு ஒன்றை சார்ந்துதான் இருக்கு என்பதை நினைக்கறதே கிடையாது.
மனிதனின் இயற்கையான குணமே கூடி வாழும் தன்மை உடையதுதான். வேறொருவரின் உழைப்பில் விளையும் உணவைத்தான் நாம் உண்கிறோம். மற்றவரின் உழைப்பில் கிடைக்கும் உடையைத்தான் உடுத்திக்கொள்கிறோம். பிறர் கட்டிய வீடுகளில்தான் வசிக்கிறோம். ஒருவர் மட்டுமே ஒரு சமுதாயமாகிவிட முடியாது. கூடி வாழ்வதும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வாழ்க்கையில் உயருவதுதான மக்களின் நடைமுறை. இ‍தைப்புரிந்து கொண்டு நம்மால் முடிந்த உதவிகளை  தேவை உள்ளவர்களுக்கு கண்டிப்பாக செய்தல் நல்லது. அடுத்தவருக்கு உதவும்போதுதான் உனக்கான உதவியை செய்ய யாராவது வருவர். 
ஒரு சிறு கதையைப் பார்ப்போம். 
ஒரு நாள் ஒரு எறும்பு தண்ணீரில் தவறி விழுந்து தத்தளித்தது.  இ‍தை கவனித்த மரத்திலிருந்த புறா ஒன்று எறும்புக்கு உதவி செய்ய எண்ணி மரத்திலிருந்து ஒரு இலையை கிள்ளி எறும்பின் அருகில் போட்டது. தண்ணீரில் விழுந்த இலையின் மீது ஏறி எறும்பு கரையை சேர்ந்தது.
பசியால் தவித்த வேடன் ஒருவன் மரத்திலிருந்த புறாவைக் கண்டான். அதைப்பிடித்து சாப்பிட எண்ணிய வேடன் அம்பை எடுத்து வில்லில் வைத்து புறாவை குறி பார்த்தான். இதனைக் கண்ட எறும்பு வேகமாகச் சென்று வேடனின் காலைக் கடித்தது. வேடன் அலறியபடி காலை நோக்கிக் குனிந்தான். இந்த சலசலப்பை பார்த்த புறா அங்கிருந்து தப்பி பறந்து சென்றது. தாம் முன்னர் காப்பாற்றிய எறும்புதான் தன்னை காப்பாற்றியது என அறிந்து மகிழ்ந்தது. ஓரறிவு உள்ள எறும்பிற்கே உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போது, ஆறறிவு உள்ள மனிதனுக்கு இது அவசியம் இருக்க வேண்டும் அல்லவா? நீங்கள் செய்யும் உதவி மற்றவரின் வாழ்த்துகளை பெற்றுத்தரட்டும். “நாம் என்ன செய்கிறோமோ, அது நமக்கே திரும்ப வரும்” என்பதுதான் பிரபஞ்ச விதி. ஆதலால் நம்மால் முடிந்தவரை உதவி செய்வோம். அனைத்து இடத்திலும் உதவி செய்வதையே தொழிலாக கொள்வோம்.
படிப்பவர்கள் கமென்ட்ஸ் பதிவு செய்யுங்கள். Share செய்யுங்கள்.

August 16, 2020
Name
Email

0